Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்?

செப்டம்பர் 22, 2019 12:06

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரது மகன் உதித் சூர்யா. இவர் கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வந்தார்.

இந்த நிலையில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு ஈமெயில் மூலம் வந்தது.

இதையடுத்து அவர் தேர்வு எழுதிய ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படம் மற்றும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நபரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் இருவரும் வேறு வேறு என தெரியவந்தது. இதுகுறித்து மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகிவிட்டது. இதனிடையே குடும்பத்துடன் தலைமறைவாக இருக்கும் உதித் சூர்யாவை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது போல் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி ஒரு மருத்துவ கல்லூரியில் சேருவது என்பது அத்தனை சுலபமில்லை என்கின்றனர் விவரம் அறிந்தோர். மேலும் இதற்காக பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே பல்வேறு விசாரணையில் உதித் சூர்யா தேனி கல்லூரியில் சேருவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் சீனாவில் படித்ததும் அங்கு ஏதோ காரணத்தினால் படிப்பை தொடர அவரால் முடியவில்லை என்றும் தெரிகிறது.

மேலும் தேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் கேட்டு வாங்கியதும் தெரியவந்துள்ளது. தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும் நண்பர்கள் என கூறப்படுகிறது. எனவே தேனி மருத்துவக் கல்லூரியை கேட்டு பெற்றால் எவ்வித இடையூறும் இன்றி படிக்கலாம் என திட்டமிட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரி முதல்வரிடம் இன்று 2-ஆவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்