Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போக்குவரத்து போலீசார் புதிய வியூகம்: ஹெல்மெட் அணியாதவர்கள் நகருக்குள் வரவும்வேண்டாம், வெளியூருக்கும் செல்ல வேண்டாம்

அக்டோபர் 02, 2019 05:00

விருதுநகர்:  ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் வருவோரை விருதுநகருக்குள் நுழைய விடாமலும், நகரில் இருந்து வெளியேற விடாமலும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிய போக்குவரத்து போலீசாரின் நடைமுறை விருதுநகர் மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹெல்மெட் போடவைப்பதற்காக லட்டு கொடுத்தது, பொட்டு வைத்தது, போடாதவர்களிடம் பைன் வாங்கி கொண்டு புதிய ஹெல்மெட் கொடுத்தது எல்லாம் பழசு. விருதுநகரில், இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் போட வைக்கும்  வகையில் புதிய நடைமுறையை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். நகரை சுற்றி உள்ள ஊராட்சிகளில் இருந்து நகருக்குள் கடைவீதிகள், கோவில், மருத்துவமனைகளுக்கு மக்கள் தினசரி வந்தாக வேண்டும். நகரில் இருந்து  பணியிடங்களுக்கு  
சென்றாக வேண்டும்.

டூவீலரில் செல்வோரின் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் போட வைப்பதற்காக அபராதம் போட்டு அலுத்து போன போலீசார், நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு வித்தியாசமான நடைமுறையை செயல்படுத்தினர். நகருக்குள் நுழையும், நகருக்குள் இருந்து வெளியேறும் அரசு மருத்துவமனை, கல்லூரி சாலை, அல்லம்பட்டி முக்கு ரோடு, சிவகாசி சாலையில் தனியார் ஓட்டல், புல்லலக்கோட்டை ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு, போலீஸ் பாலம், ரயில்வே  பீடர் ரோடு, நகரின் நுழைவு பகுதி ஸ்டார் லாட்ஜ் என 9 இடங்களில் செக் போஸ்ட்களை அமைத்தனர். ஒவ்வொரு இடங்களிலும் தலா 4 போலீசாரை நிறுத்தி ஹெல்மெட் போடால் டூ வீலரில் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

இதை தொடர்ந்து ஹெல்மெட் போடாமல் வந்தவர்கள் திரும்ப வீடுகளுக்கு சென்று ஹெல்மெட் போட்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். காலை 9 மணிக்குள் நகருக்குள் ஹெல்மெட் போடாமல் வந்தவர்களுக்கு நகரை விட்டு  வெளியேற முடியாத நிலை உருவாகியது. இது குறித்து போலீசார் கூறுகையில், ஹெல்மெட் போடாமல் டூவீலரில் வருவோரை நிறுத்தி திருப்பி அனுப்பும் நடைமுறை சிலநாட்களுக்கு காலை 9 மணி முதல் 12 மணி வரை பின்பற்றப்படும். மதியம் 12 மணிக்கு மேல் வந்தால் அபராதம்  விதிக்கப்படும். திருப்பி அனுப்பும் நடைமுறையால் மாற்றம் ஏற்படும் என நம்புவதாக தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்