Wednesday, 12th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஃபார்ச்சூன் 500 இந்தியா பட்டியல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடம்

டிசம்பர் 17, 2019 11:02

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருமானம் ரூ.5.81 லட்சம் கோடியாகும். இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 

அது ஐஓசி வருமானத்தை விட 8.4 சதவீதம் அதிகமாகும். ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 26.6 சதவீதம் கூடுதல் வருமானம் ஈட்டியது. இருப்பினும் ரிலையன்ஸ் ஈட்டிய வருமானமானது ஐஓசி வருமானத்தைவிட இரு மடங்காகும். ஐஓசி வருமானம் ரூ.39,588 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் அதைவிட இருமடங்கு அதிகம் பெற்று ரிலையன்ஸ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் வருமானம் 2019-ம் ஆண்டில் 9.53 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் லாபம் 11.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டுபட்டியலில் இடம் பிடித்த 57 நிறுவனங்கள் இம்முறை பட்டியலில் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்த நிறுவனங்களும், வங்கிகள் இணைப்பில் இணைந்த வங்கிகளும் பட்டியலில் இல்லை. ஐஓசி கையகப்படுத்திய ஹெச்பிசிஎல் நிறுவனம், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் வாங்கிய ஆர்இசி நிறுவனம், பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக் கப்பட்ட விஜயா வங்கி, தேனா வங்கிகள் தற்போதைய பட்டியலில் இல்லை. அதேபோல டாடா ஸ்டீல் வாங்கிய பூஷன் ஸ்டீல் நிறுவனம், ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைக்கப்பட்ட கேபிடல் ஃபர்ஸ்ட் நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.

நிறுவனங்கள் எதிர்கொண்ட நஷ்டமும் கணிசமாகக் குறைந்துள்ளது. மொத்தம் 63 நிறுவனங்கள் எதிர்கொண்ட ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.1.67 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு 79 நிறுவனங்கள் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. மொத்தமுள்ள 22 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.74,253 கோடியாகும். இதில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ரூ. 1907 கோடியும், லட்சுமி விலாஸ் வங்கி ரூ. 894 கோடியும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட மொத்தமுள்ள 24 வங்கிகளின் லாபம் 6.16 சதவீதம் அதிகரித்து ரூ.60,747 கோடியாக அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்