Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.183 கோடி திட்டத்தால் ஈரோடு ஓடைக்கு ஆபத்து

ஜனவரி 13, 2020 01:17

ஈரோடு: ஈரோடு மாவட்ட வரலாற்றில் முக்கிய ஓடையாக இருக்கும் `பெரும்பள்ள ஓடை’ இன்றைக்கு பெரும் சோதனையில் சிக்கித் தவிப்பதாக வேதனைப்படுகின்றனர் இயற்கை மற்றும் சூழலியல் ஆர்வலர்கள்.

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், மாநகராட்சியின் வரைபடத்தையே ஸ்மார்ட்டாக மாற்றுவோம்' என்கின்றனர் அதிகாரிகள். `அதற்காக மாநகரின் நடுவில் ஓடும் 12 கி.மீ ஓடையை அழிப்பதா?’ எனக் கொதிக்கின்றனர் ஈரோட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள்.

பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்ததுதான் ஈரோடை. ஈரோடைதான் காலப்போக்கில் மருவி `ஈரோடு’ என்றானதாக வரலாறுகள் சொல்கின்றன. அப்படி ஈரோடு மாவட்டத்தினுடைய வரலாற்றில் ஒரு முக்கிய ஓடையாக இருக்கும் `பெரும்பள்ள ஓடை’ இன்றைக்கு பெரும் சோதனையில் சிக்கித் தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

ஈரோடு மாநகருக்குள் சுமார் 12 கி.மீ பயணிக்கும் இந்த பெரும்பள்ள ஓடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இவற்றை அகற்றி, ஓடையை மீட்டெடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர்.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 183 கோடி மதிப்பீட்டில் இந்த ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. `இந்தப் பணியால் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிடும். ஆனால், ஓடை அழிந்துவிடுமே!’ எனக் குற்றச்சாட்டை வீசியிருக்கிறார் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம்.

அவரிடம் பேசினோம். ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்கள். நல்ல விஷயம்தானே என நினைத்தோம். ஆனால், இப்போது ஓடையின் இரு புறங்களிலும் சுமார் 40 அடிக்கு நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். ஓடையின் ஓரத்தில் குடிசை போட்டவர்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் நடைபாதைகளைக் கட்டினால் அதற்குப் பேரும் ஆக்கிரமிப்புதானே?. அதுமட்டுமல்லாமல் ஓடையைத் தூர்வாரி சிமென்ட் தரைகளை அமைக்கவிருக்கிறார்கள்.

இருபுறங்களிலும் சிமென்ட் கரைகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இப்படிச் செய்தால் ஓடையில் செல்லும் நீர் எப்படி நிலத்துக்குள் இறங்கும். இந்த ஓடையை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் என்னவாகும்..? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காசு இருக்கிறது என்பதற்காக ரூ.183 கோடியில் ஓடைக்கு சமாதி கட்டுவார்களா. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருக்கிறேன். கண்முன்னே ஓர் ஓடையின் உயிரை அழிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது!” என்றார் கொதிப்புடன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் மாநகராட்சி அதிகாரிகளோ,``ஓடைக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாத வகையில்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம். எனவே, இத்திட்டத்தால் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்” என்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்