Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பு மாநிலங்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் தமிழகம்: 309ல் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 264 பேர்

ஏப்ரல் 03, 2020 06:31

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 309 உடன் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 31ம் தேதி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. ஆனால் கடைசி 3 நாட்களில் பல மடங்கு அதிகரித்து 309 ஆக அதிகரித்து உள்ளது..

இதில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், ‘‘தமிழகத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனைகள் முடிந்தன. சிலருக்கு முடிவுகள் வரவேண்டி உள்ளது.

 வீட்டுக்கண்காணிப்பில் 86,342 பேரும், அரசு கண்காணிப்பில் 90 பேரும் உள்ளனர். 28 நாள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு முடிவடைந்து 4,070 பேர் சென்றுள்ளனர்’’ என்றார்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக 416 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் இதுவரை 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது, மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்