Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் பட்டினிச் சாவுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்: ஸ்டாலின்

ஏப்ரல் 09, 2020 03:47

சென்னை: “கொரோனாவால் பட்டினிச் சாவுகள் ஏற்படுவதைத் தடுக்க அலட்சியம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். இது இன்றைய நெருக்கடியான காலத்தின் இன்றியமையாத் தேவை என்பதை அனைவருமே உணர்ந்து நடந்து வருகிறார்கள்.

நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்வதுபோலவே, உணவுத் தட்டுப்பாடின்றி காக்கவேண்டியதும் அவசியம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30% உயர்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100%க்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
 நெல் உள்ளிட்ட தானியங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதால் அவர்களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை தொடருகிறது.

சிறு வணிகர்கள் - காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி லாப நோக்கத்துடன் செயல்படக்கூடியவர்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
அத்துடன், 15 நாட்களாக எவ்வித வருமானமும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் அன்றாட உடலுழைப்புத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, வறுமை புகுந்து வாட்டி வருவதையும் அரசாங்கம் உற்றுக் கவனித்து, அந்தப் பிரிவினரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திட வேண்டும்.

கொரோனாவால் பட்டினிச் சாவுகள் ஏற்படுவதைத் தடுக்க அலட்சியம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளைப் பெருவாரியான மக்களுக்கு விரைவாக நடத்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிவாரணத் தொகை, உணவுப் பொருட்களை நியாயமான அளவுக்கு வழங்குவதே மத்திய, மாநில அரசுகளின் உடனடி செயல்பாடாக அமைந்திட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்