Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரம் முழுவதும் மளிகை, இறைச்சி கடைகள் திறக்க அனுமதி: புதுக்கோட்டை கலெக்டர் அதிரடி

ஏப்ரல் 18, 2020 07:48

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இறைச்சி- மளிகை கடைகள் வாரம் முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி தெற்கு ராஜவீதியில் இயங்கும் மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது; கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சி தெற்கு ராஜவீதியில் இயங்கும் மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை கடைகள் திங்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இதனை தளர்த்தி அரசால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து நாட்களிலும் மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கால அளவில் தொடர்ந்து இயங்கும். பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும்.

வேளாண்மைத்துறையின் மூலம் நடமாடும் காய்கனி அங்காடிகள் 115 இடங்களில் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் போது பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசமும் வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்டத்தின் 5 நடமாடும் வாகனங்கள் மூலம் உர விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறினார்.

இதையடுத்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடை, காய்கறி, பழக்கடை, பேக்கரி, வேளாண் இடு பொருட்கள் மற்றும் உரக்கடைகள், மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி விற்பனை கடைகள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி விற்பனை கடைகள் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் எதிர்புறம் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும், அறந்தாங்கி பேராவூரணி சாலையில் அமைந்துள்ள வாரச் சந்தையிலும் மற்ற வார நாட்களில் வழக்கமான இடங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருந்தகங்கள் மற்றும் ஆவின் பாலகங்கள் மட்டும் எப்போதும் போல் இயங்கும். இது வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த உத்தரவினை கடைபிடிக்காத மற்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்

தலைப்புச்செய்திகள்