Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு குறித்த ராகுல்காந்தியின் கருத்தை வரவேற்கிறேன்: வேல்முருகன்

ஏப்ரல் 18, 2020 10:24

சென்னை
“கொரோனாவுக்கு லாக்டவுன் மட்டுமே தீர்வல்ல என ராகுல்காந்தி தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன். மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பிரதமர் மோடி என்ன வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்போகிறார்?” என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேளவி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோடியே கொரோனாவுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதை மாநிலங்களுக்கு உத்தரவிடுகிறார். இதில் கேரளா, மேற்கு வங்கம், மகாரஷ்டிரா போன்ற ஒருசில மாநிலங்கள்தான் விதிவிலக்கே தவிர, மற்றபடி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் மோடியின் சொல்படிதான் செயல்படுவதாகவே இருக்கின்றன. காரணம் அரசியல் அறியாமைதான்.

பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் தேர்வு செய்யும் ஒன்றிய அரசுதான் இந்திய அரசு. ஆனால் அந்த ஒன்றிய அரசுக்கோ தான் சுயம்பு என்பதாக நினைப்பு. அதனால் தன்னை உருவாக்கிய மாநிலங்களையே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. முதலில் நான்கே மணி நேர இடைவெளியில், அதுவும் இரவு தூங்கப்போகும் நேரத்தில் பார்த்து 144 ஊரடக்கை அறிவித்தார் மோடி. எந்தவித முன்னேற்பாட்டுக்கும் வழி இல்லாததால் பாதிக்கும் மேல் இந்திய மக்கள் பட்ட பாட்டை எத்தனை தடவை சொல்வது?

வீட்டுக்குள்ளேயே முடங்குவதால் உணவுக்கு வழியில்லாத மக்களுக்கு அதற்கான ஏற்பாட்டையும் அறிவிக்கவில்லை. ஏழைகள், அடித்தட்டு மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வீடு, வேலை அற்றவர்கள் ஆகிய இவர்களே 60 விழுக்காடு இந்தியா எனும் உணர்வு இல்லாததே காரணம்.
ராகுல் காந்தி, ஊரடங்கை நீட்டிப்பதால் மட்டுமே பயனில்லை என்பதோடு, மாநிலங்களுக்கான நிதியை விரைந்து வழங்கச் சொல்வதில் பொருள் புதைந்து இருக்கிறது. நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றால், கொரோனாவுக்கான கருவிகள், மருந்துகளை மத்திய அரசல்ல, மாநிலங்களே வாங்கிக்கொள்ளும் என்பதுதான் அதற்குப் பொருள். தான் மட்டுமே கொரோனாவை தூக்கிச் சுமப்பதாகாக மோடி காட்டிக்கொள்ள வேண்டாம் என்பதுதான் அதில் புதைந்திருக்கும் பொருள்.
இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்  கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்