Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா எதிராலியால் 20% விலை குறையும் வீடுகள்!

ஏப்ரல் 19, 2020 11:13

சென்னை: “ஊரடங்கு உத்தரவால் வீடுகளின் விலை 20 சதவீதம் வரையில் குறையும்,” என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிரமாக இருக்கும் நிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு, ஏற்றுமதி வர்த்தகமும், முதலீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் நடப்பு 2020-21ம் நிதியாண்டில் கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. அக்கியூட் ரேட்டிங்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.7.5 லட்சம் கோடி வரையில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவால் ஐ.டி. உற்பத்தி, விருந்தோம்பல், சுற்றுலா உள்ளிட்ட துறைகளைப் போல ரியல் எஸ்டேட் துறையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் அடுத்தகட்ட தொழில் மூலதனமும் கேள்விக்குறியாகியுள்ளது. மக்களிடையே தேவை குறைந்துள்ளதால் வீடு விற்பனை அடுத்து வரும் நாட்களில் மிக மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜனவரி - மார்ச் காலாண்டிலும் வீடு விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக்கின் கணிப்பின்படி, வீடுகளின் விலை 20 சதவீதம் வரையில் வீழ்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சிலின் மதிப்பீடுகளின்படி, ஊரடங்கு உத்தரவால் வீடுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரையில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருந்தாலும், உத்தரவாதம் மிக்க வேலையில் இருப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும் எனவும், குறைந்த விலைக்கு அவர்கள் வீடுகள் வாங்கிப் பயன்பெறலாம் எனவும் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். பணப் புழக்கம் அதிகமாக இருப்பவர்களுக்கும் வீடுகள் வாங்க நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 2016ம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டது போன்ற காரணிகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பாதிப்புகளிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் சூழலில் தற்போது கொரோனா பீதியால் ஊரடங்கு அமலானது மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கும் வீடுகள் பல விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. ரியல் எஸ்டேட் துறை தரப்பிலிருந்து அரசிடம் நிவாரணமும் கோரப்பட்டுள்ளது. நிலைமை சீரானால் வந்த விலைக்கு வீடுகளை விற்றுவிட்டால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது என்று தீபக் பரேக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்