Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் விதிமீறல்கள் குறித்து ‘சி-விஜில்’ செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

மார்ச் 12, 2019 05:59

சென்னை: தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் தமிழகத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறைகளை விளக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. 
 
கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜி.பிரகாஷ் தலைமை தாங்கினார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. ந.பாலகங்கா, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, கோட்ட பொறுப்பாளர் எம்.ஜெய்சங்கர், தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் மருது கணேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்துக்கு பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- 

சென்னையில் நாடாளுமன்ற தேர்தலும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது. ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 மணி நேரத்துக்கு ஒரு பறக்கும் படையினர் என்ற வகையில் 24 மணி நேரமும் பணியாற்றுவர். 

மேலும் சிறப்பு வீடியோ பதிவிடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அரசியல் தலைவர்களின் பிரசாரங்களையும், அரசியல் கட்சியினரின் நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்து கொடுப்பார்கள். சென்னையில் 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட 24 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் அதிகாரிகளிடம், வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு கழிப்பறை, குடிநீர், நிழல் குடை உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு கொடுத்துள்ள புதிய தேர்தல் விதிமுறைகளும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற, தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து தேர்தல் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் எந்த ஒரு தயக்கமுமின்றி தேர்தலில் வந்து வாக்களிக்கலாம். 

அதேபோல் சுவர் விளம்பரங்களை முழுவதுமாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வளாகத்திலும், அதன் அருகிலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது. அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமானவரித்துறையிடம் புகார் கொடுக்கப்படும். 

மேலும் தேர்தல் நடைபெறும் தேதியில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை இருப்பதால் வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அரசியல் கட்சியினர் நடத்தும் பொது கூட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் நடைபெறாமல் தடுக்க அனைத்து கட்சியினரிடமும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் விதிமீறல்களை தவிர்க்கும் விதமாக தேர்தல் கமிஷன் சார்பில் ‘சி-விஜில்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்களை உடனே பறக்கும் படையினருக்கு தெரிவிக்க முடியும். பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்தியும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் மாநகராட்சி இணை கமிஷனர் லலிதா, துணை கமிஷனர்கள் கோவிந்த ராவ், மதுசுதன் ரெட்டி, சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்