Wednesday, 12th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது: மக்கள் அதிகம் வரவில்லை

ஏப்ரல் 22, 2020 06:38

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது. ஆனால் மக்கள் அதிகம் வரவில்லை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது. புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரி மற்றும் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். குறைந்த அளவில் மட்டுமே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவர்கள் கைகளை கழுவும் வகையில் ஒரு வாளியில் தண்ணீர் மற்றும் கிருமி நாசினி தனியாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்தில் உள்ளே பத்திரம் பதிய வருபவர்கள் இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வசதியாக கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அலுவலகத்தில் அதிகாரி மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினர்.

கொரோனா அச்சம் காரணமாக பத்திரம் பதிய மக்கள் அதிகம் யாரும் வரவில்லை. டோக்கன் பெற்ற ஒரு சிலரே பத்திரம் பதிய வந்திருந்தனர். அவர்களுக்கு வளாகத்தில் பத்திர எழுத்தர்கள் ஆவணங்களை நிரப்பி கொடுத்தனர். பத்திரம் பதிய வந்தவர்களும் முக கவசம் அணிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள மொத்தம் 12 சார்-பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட தொடங்கியது. மொத்தம் 10 பத்திரங்கள் மட்டும் பதிவாகி இருந்தது.

ஒரு சில அலுவலகங்களில் ஒருத்தர் கூட வரவில்லை. இதேபோல பத்திர எழுத்தர்களும் ஒரு சிலரே வந்திருந்தனர். ஏற்கனவே உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி ஒரு மணி நேரத்திற்கு தலா 4 டோக்கன் வீதம் பதிவு செய்யப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்