Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிமாநில தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை: ரயில்வே விளக்கம்

மே 04, 2020 12:21

புதுடெல்லி: வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு இயக்கப்படும் ரயில்களில், பயணிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே விளக்கமளித்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சிக்கி கொண்டனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயிலில் பயணிக்க சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் செலவை காங்கிரஸ் ஏற்கும் என அக்கட்சி தலைவர் சோனியா தெரிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்தார்.

இந்நிலையில், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில், வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட வெளிமாநில தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் ஆகியோருக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், மாநில அரசுகள் வேண்டுகோளின் பேரில் மட்டுமே இயக்கப்படுகின்றன. மற்ற பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாநில அரசுகளால் அழைத்து வரப்படும் பயணிகளை மட்டுமே ரயில்வே அனுமதிக்கிறது.

வேறு எந்த பயணிகள் குழுவினரோ அல்லது தனி நபரோ ரயில் நிலையத்திற்கு வர அனுமதி கிடையாது. எந்த ரயில் நிலையத்திலும், பயணச் சீட்டுகள் விற்கப்படவில்லை. மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கேற்ப இயக்கப்படும் ரயில்களைத் தவிர, வேறு எந்த ரயில்களையும் இயக்கவில்லை.

அனைத்து பயணிகள் மற்றும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலை தொடர்கிறது. எனவே எந்த ஒரு நபரும் ரயில் நிலையத்திற்கு வரக்கூடாது. இதுதொடர்பான போலி செய்திகளை யாரும் பரப்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட காங்., தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில், சொந்த பணத்தை எடுத்து மக்களுக்காக செலவழித்தது கிடையாது. தற்போது முதன்முறையாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில் கட்டணத்தை ஏற்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், 85 சதவீத கட்டணத்தை ரயில்வேயும், 15 சதவீத கட்டணத்தை மாநில அரசும் ஏற்ற பிறகு, கட்டணத்தை தாங்கள் ஏற்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது வேடிக்கையானது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்