Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரும்பவும் திருச்சிக்கு வருவோம்: வடமாநில இளைஞர்கள் உற்சாகம்

மே 07, 2020 02:18

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்த 140 வட மாநில இளைஞர்கள் வருகிற 10ம் தேதி அவரது சொந்த ஊருக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மேற்கு வங்காளம், மும்பை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து வடமாநில வாலிபர்கள் பல்வேறு தொழிலுக்காக வந்து தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். திருச்சி பொன்னகரில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருமணம், அரசியல் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரமாண்ட பந்தல் அமைப்பது, தோரணம் கட்டுவது போன்ற பணிகளில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் திருமணம், அரசியல், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்ற பணிகள் நடை பெறவில்லை.

எனவே, இந்த வடமாநில வாலிபர்கள் வேலை இல்லாமல் தவித்தனர். இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி செ‌ஷன்ஸ் கோர்ட் போலீசார் மூலம் இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த 140 வட மாநில வாலிபர்கள் வருகிற 10ம் தேதி அவர்களது சொந்த ஊருக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்ததாவது:
மேற்கு வங்காளம் பகுதிகளில் அதிகளவில் விவசாயத்திற்கு தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அங்கு அதற்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் பந்தல் அமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். இதில், நல்ல வருமானம் கிடைப்பதால் இங்கு தங்கியிருந்து வேலை பார்த்தோம். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதும் திருச்சிக்கு வர ஆர்வமாக இருக்கிறது. சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், போலீசார் ஆகியோருக்கு நன்றி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்