Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் கவர்னர் : நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

மே 11, 2020 06:43

புதுச்சேரி :கலால் துறையும், காவல் துறையும் ஆதரமற்ற குற்றச்சாட்டைக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலத்தில் வெளியில் இருந்து மதுக்களை வாங்கி வருபவர்கள் அல்லது மொத்த வியாபாரிகளிடம் பெறுபவர்கள் அதற்கான கலால் வரியை கட்டிவிட்டு தான் வாங்குகின்றனர். அந்த நிதி மாநில அரசுக்கு தான் செல்கிறது.

நானோ, அமைச்சர்களோ தவறு செய்பவர்களுக்கு துணைபோக மாட்டோம். மதுக்கடை உரிமையாளர்கள் தவறு செய்தால்அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் அரசின் நோக்கம்.ஆனால் மதுக்கடை உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை ஏற்க முடியாது. மது திருடு போனதாக புகார் கொடுக்கும் கடை உரிமையாளர் மீதே வழக்கு போடப்படுகிறது.

இது காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகம். இரவில் கைது செய்வதும் ஏற்க முடியாது. கணக்கை காட்ட காலக்கெடு கொடுக்காமல் உரிமத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதும் அதிகார துஷ்பிரயோகம் தான்.அதிகாரமே இல்லாமல் காவல் துறை, கலால் துறை விஷயத்தில் தலையிட்டு மாநிலத்தில் மிகப்பெரிய குழப்பதை உருவாக்கியுள்ளனர். இதற்கு மூல காரணம் கவர்னர். அவர், கீழ்நிலை அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியாமல் பொய்யான தகவலை சொல்லி, மாநிலத்தின் வருவாயை கெடுத்து வருவதோடு, அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துகிறார். இதற்கு காவல் துறையில் சிலர் ஊதுகோலாக உள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலர், கலால் செயலர், துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதில் கலால் துறையில் நடந்த பிரச்னைகள் முறையாக விசாரிக்காமல் நீங்கள் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளீர்கள்; அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இனிமேல் விசாரணைகளை கொரோனா முடியும் வரை தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளேன். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்