Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுவிலக்கு சாத்தியமே இல்லை; 2 மணிநேரமாவது மதுக்கடை திறந்திருக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

மே 11, 2020 08:30

புதுக்கோட்டை: “உலகில் மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை; ஒரு நாளைக்கு 2 மணிநேரமாவது மதுபான கடையை திறந்திருக்க வேண்டும்,” என்று சிவகங்கை லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
மதுவிலக்குப் பிரச்சினையில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களுடன் நான் மாறுபட்டு நிற்கிறேன். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. அந்த கொள்கையும் வெற்றி பெறாது. கடந்த 45 நாட்களாக மதுக்கடைகளை மூடாமல் நாள்தோறும் 2 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து இருந்தாலே ஒரே நாளில் மதுபான பாட்டில்களை வாங்க கூட்டம் குவிந்து இருக்காது.

தமிழக அரசு ஆன்-லைன் மூலம் மது விற்பனை செய்து இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. மதுக்கடைகளை முற்றிலுமாக மூடியதால் தான் மாற்று போதை தேடி மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. அதுதான் என்னுடைய கருத்தாகும்.

அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களுத்தான் நான் பதில் கூறமுடியும். ரஜினிகாந்திடம் கருத்து இருக்கலாம். ஆனால், அதற்கு நான் பதில் கூற முடியாது. ஊரடங்கு உத்தரவை தளர்வின்றி நீடிக்க முடியாது . அதன் அடிப்படையில்தான் தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்திருக்கிறது. இருந்தபோதிலும் இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அரசு அவர்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்கவில்லை. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

அண்மையில் திண்டிவனம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழக அரசு மதுக்கடைகளை மூடி இருக்கக் கூடாது. கூடுதல் வரி விதித்து விற்பனை செய்திருக்க வேண்டும். பொதுவாக மதுபான விற்பனை கடைகளின் நேரத்தை குறைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்