Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலூரில் சாராயம் காய்ச்சிய 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மே 11, 2020 09:28

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சிய 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாராயம் காய்ச்சியதாக ஆண்டிமடம் பகுதியில் நாகம்பந்தல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜதுரை (41), வேலு (40), ஜெயங்கொண்டம் பகுதியில் கல்வெட்டு கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த கல்வெட்டு குமார் என்ற குமார்(39), தளவாய் பகுதியில் கூடலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த படைகாத்தான்(40), முருகேசன் மகன் வீரமணி(33), கிழக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகாந்த்(28), செந்துறை பகுதியில் தெற்குப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த அய்யப்பன்(36), வெங்கனூர் பகுதியில் குலமாணிக்கம் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த ஆஸ்லின் ஜோயல்(37), கயர்லாபாத் பகுதியில் மண்ணுழி தெற்கு தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சிலம்பரசன்(32) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சாராயத்தை அழித்தனர்.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்து 9 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் சாராயம் குடிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சிறையில் இருக்கும் 9 பேரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்ணன் (மது விலக்கு அமலாக்கப்பிரிவு) திருமேனி (அரியலூர் சரகம்) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனின் பரிந்துரையை ஏற்று 9 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் மீது கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ராஜதுரை, வேலு குமார், படைகாத்தான், வீரமணி, விஜயகாந்த் , அய்யப்பன், ஆஸ்லின் ஜோயல், சிலம்பரசன் ஆகிய 9 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை போலீசார் காண்பித்து அவர்களிடம் கையெழுத்து பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்