Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவியை கொன்ற கொடியவர்களுக்கு கடும் தண்டனை வழங்குக: வைகோ, வேல்முருகன் கோரிக்கை

மே 11, 2020 02:53

சென்னை: “விழுப்புரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட மாணவி வழக்கில் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,” என தமிழக அரசுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் கிளை செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பத்தாம் வகுப்புப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை, கால்களைக் கட்டிப்போட்டனர்.

பின்னர் அந்த சிறுமியின் வாயில் துணி வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்திய கொடூரச் செயல் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் அதன் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ 95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அவர், அப்பகுதியினரால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உயிழந்தார்.

இந்தக் கோர சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த இருவா், முருகன் மற்றும் கலியபெருமாள், தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்தார். அந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மாணவியின் சித்தப்பா, முருகன் தரப்பால் ஏற்கனவே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கும் நடந்துவருகிறது. ஆளுங்கட்சி அதிகார மமதையே இந்தக் கொலைக்கு அடிப்படைக் காரணம் என்று சொல்ல முடியும். எனவே, இந்த மிருகச்செயலில் ஈடுபட்ட முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்