Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமழிசையில் புதிய காய்கறி சந்தையில் விற்பனை துவக்கம்

மே 11, 2020 03:20

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதால் சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய காய்கறி சந்தை செயல்பட தொடங்கியுள்ளது. திருமழிசையில் அதிகாலை முதல் விற்பனை தொடங்கி ஜரூராக நடைபெற்று வருவது பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்ந்து இயங்கி வந்தது. இதனால் ஊரடங்கு உத்தரவு காலத்திலும் காய்கறி விலைகள் உயராமல் இருந்தது. விவசாயிகளும் ஓரளவு பாதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் ஒரு சேர குவிந்ததால் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

அத்துடன் கோயம்பேடு சந்தையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. அதேநேரத்தில் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இந்த காய்கறி சந்தை அமைக்கும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இதில் காய்கறி கடைகள், அனைத்து தரப்பினருக்குமான குடிநீர், கழிப்பிட வசதிகள் அனைத்தும் துரிதகதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று முதல் திருமழிசை காய்கறி சந்தையில் விற்பனை தொடங்கியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சி.எம்.டி.ஏ. செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். இங்கு A,B,C,D என 4 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. இந்த காய்கறி சந்தைக்கு 450 லாரிகளில் 6,000 டன் வரை காய்கறிகள் வந்துள்ளன. நேற்று 50 கடைகள் மட்டும் இயங்கவில்லை.

இன்று மட்டும் சுமார் 3,000 டன் காய்கறிகள் ரூபாய் 60 லட்சத்திற்கு விற்பனை ஆகி உள்ளதாக கோயம்பேடு மார்கெட் முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திருமழிசை சந்தை தொலைவில் அமைந்துள்ளதால் அதிகாலையிலேயே சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்று விட்டனர்.

தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் பூந்தமல்லி, உள்ளிட்ட சுற்று பகுதியில் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் வியாபாரம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்