Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

மே 12, 2020 06:31

சென்னை: தொழிலாளர்கள் எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் தவிப்பதால் முடிதிருத்தும் நிலையங்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் முடிதிருத்தும் நிலையங்கள் உள்ளன. அதில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இவர்கள் எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் உழல்கின்றனர்.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் இவர்கள் எல்லோரும் பதிவு செய்து கொள்ளவில்லை. தமிழ்நாடு முழுவதும் 17 ஆயிரத்து 300 பேர் மட்டுமே இந்த நலவாரியத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நிவாரணமும் கூட அதில் ஒரு சில ஆயிரம் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று இந்த சங்கத்தின் நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

‘அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களைத் தொழில் செய்ய அனுமதித்தாலே போதும்’ என்பதுதான் இவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்ன விதமான நிபந்தனைகளை விதிப்பது என்பதை ஆலோசித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, முடிதிருத்தும் நிலையங்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்