Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

மே 12, 2020 07:25

புதுடெல்லி: ''பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி, இறப்பு விகிதத்தை குறைத்திருப்பது பாராட்டத் தக்கது,'' என, டபிள்யூ.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர், தேசிய தொழில்நுட்ப தின விழாவில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கூறியதாவது:இந்தியாவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ்வர்த்தன் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டுகிறேன். பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை, இந்தியாவில் குறைவாக உள்ளது.

இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும், கொரோனா பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகின்றன. இதற்கு, பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்கு தயாராக வேண்டும். இந்தியாவில், பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த, இது தான் சரியான தருணம். அத்துடன், சுகாதார பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி கண்டுபிடிப்பில், இந்தியா எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது.

இதில், இந்தியா பங்கு கொள்ளாவிடில், உலகில் போதுமான தடுப்பூசிகள் கிடைத்திருக்காது. ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, சோதனைக்குப் பின், பயன்பாட்டிற்கு வர, 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், 'எபோலா' வைரசுக்கு, ஐந்து ஆண்டுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவுக்கு, ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்க முயற்சிக்கப்படுகிறது. இதற்கு தொழில்நுட்ப பரிமாற்றம், உத்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்