Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம் ஏன்?

மே 12, 2020 10:57

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நேர்மையாக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவரது இடமாற்றத்தால் தன்னார்வலர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொரோனா முன்களப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டனர்.

கர்நாடகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தொழிலாளர் நலத் துறையின் முதன்மை செயலாளருமாக இருந்தவர் மணிவண்ணன். இவர் தகவல் துறையின் செயலாளராகவும் இருந்து வந்தார். மிகவும் நேர்மையான அதிகாரியான இவர் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி கொரோனா போராளி குழுவை தொடங்கியுள்ளார். அந்த குழு மூலம் இவரது தலைமையின் கீழ் ஏராளமான தன்னார்வலர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அவர் திங்கள் இரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாற்றத்திற்கான உத்தரவில் எந்தவித காரணமும் குறிப்பிடப்படவில்லை.

இவருக்கு பதிலாக மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகேஸ்வர் ராவை அரசு பணியமர்த்தியது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் கொரோனா களப்பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டனர். மேலும் #BringBackManivannan என்ற ஹேஷ்டேக்கை டிரென்டாக்கி வருகிறார்கள். மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணமாக அவர் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தியதே என கூறப்படுகிறது. லாக்-டவுனின் போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊதியம் வழங்கவில்லை என கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்ட புகார்கள் மணிவண்ணனை வந்தடைந்தன.

அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த விவகாரம் குறித்து மாநில அரசு விளக்கம் கேட்டு நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்’ என தெரிவித்திருந்தார். இதுவும் மணிவண்ணன் இடமாற்றத்திற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் அவரது நேர்மையான செயல்பாடுகளில் அமைச்சர்களுக்கு அதிருப்தி நிலவியதும் இந்த இடமாற்றத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்