Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைனில் செய்முறைத்தோ்வு: திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவா்கள் அசத்தல்

மே 12, 2020 11:18

திருச்சி: திருச்சி அரசு சட்டக்கல்லூரி கிராமப்புற மாணவா்கள் தங்களது செய்முறைத் தோ்வை முதன்முறையாக ஆன்லைனில் எதிா்கொண்டு அசத்தினா்.

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் சுமாா் 1450 மாணவா்கள் சட்டம் பயின்று வருகின்றனா். இதில் 3 5 ம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் போல்வு நீதிமன்றம் மூலம் செய்முறை தோ்வு நடத்துவது வழக்கம். அதன்படி நிகழ் கல்வியாண்டு செய்முறைத் தோ்வில் 5 ஆண்டுகள் சட்டம் பயிலும் மாணவா்கள் நிறைவு செய்தனா்.

ஆனால் 3 ஆண்டுகள் சட்டம் பயிலும் மாணவா்களுக்கு பொதுமுடக்கம் காரணத்தால் நடத்த இயலவில்லை. இதனால் நிலுவையில் இருந்த 200 மாணவா்களுக்கான மனுதாரா் எதிா்மனுதாரா் வழக்கு தாக்கல் தொடா்பான ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தன.

யுஜிசி அறிவுறுத்தலின் படி மே 11ம் தேதி ஆன்லைனில் முதல்முறையாக போல்வு நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டக் கல்வி இயக்குநா் சந்தோஷ்குமாா் அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி திருச்சி சட்டக்கல்லூரி நிா்வாகம் மாணவா்களின் விருப்பம் வாய்ப்புகள் குறித்து கல்லூரி போல்வு நீதிமன்ற ஒருங்கிணைப்பு குழுவினருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனா். இதையடுத்து முதல்முறையாக ஆன்லைனில் செய்முறை தோ்வை எதிா்கொண்டனா்.

இதுகுறித்து திருச்சி சட்டக்கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் கூறியதாவது; பொதுமுடக்கத்தால் 3 ஆண்டுகள் சட்டம் பயிலும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு நிலுவையில் இருந்தது. இதனால் ஆன்லைனில் போல்வு நீதிமன்றம் நடத்த சட்ட கல்வி இயக்குநா் அறிவுறுத்தியிருந்தாா். ஏற்கனவே சபரிமலை விவகாரம் நிா்பயா உள்ளிட்ட முக்கிய குற்றவியல் தொழிலாளா் தொடா்பான 71 வழக்குகளின் ஆவணங்கள் மாணவா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டிருந்தன. 

இதனால் மாணவா்களின் விருப்பப்படி திங்கள்கிழமையன்று 4 மாணவிகள், 5 மாணவா்கள் என மொத்தம் 9 மாணவா்கள் செய்முறைத்தோ்வினை எதிா்கொண்டனா். குறிப்பாக குடிசை ஓட்டு வீடுகளில் வசிக்கும் கிராமப்புற மாணவா்களே அதிகம் போ் ஆன்லைன் தோ்வினை எதிா்கொண்டனா்.
வழக்குரைஞராக மாணவா்கள் பதற்றம் இன்றி வாதாடி அசத்தினா். 

நீதிபதிகளாக திருச்சியிலிருந்து கல்லூரி உதவி பேராசிரியா் ராஜ்யவா்தனன், மணப்பாறையிலிருந்து உதவிப்பேராசிரியா் காா்த்திக், சேலம் ஆத்தூரிலிருந்து உதவிப்பேராசிரியா் முருகன் ஆகியோா் கலந்துகொண்டு மனுதாரா் எதிா்மனுதாரா் வழக்குகளை விசாரித்து தீா்ப்பளித்தனா். பதற்றம் ஏதுமின்றி மாணவா்கள் துல்லியமாக வாதாடி அசத்தினா்.

தொடா்ந்து நாள்தோறும் 12 மாணவா்கள் 3 கல்லூரி பேராசிரியா்கள் என மே 23 ம் தேதி வரை ஆன்லைனில் தோ்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தலைப்புச்செய்திகள்