Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜயபாஸ்கர் படத்துடன் நாளைய முதல்வர் ஸ்டிக்கர்: புதுக்கோட்டையில் அ.ம.மு.க. பிரமுகர் அதிரடி கைது!

மே 12, 2020 11:30

புதுக்கோட்டை: "நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்" என்று அரிசி மூட்டையில் தவறாக சித்திரித்து குழப்பம் ஏற்படுத்தியதாக அ.ம.மு.க.வின் பிரமுகரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அ.தி.மு.க. - அ.ம.மு.க.வில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஓரிரு மாதங்களாகவே முதல்வருக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் புகைச்சல் என்ற செய்திகள் கசிந்தன. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் ஊரடங்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் வழங்கிய பொன்னி அரிசி மூட்டையில் ஒரு ஸ்டிக்கர் இருந்தது. விஜயபாஸ்கர் போட்டோவுடன் "நாளைய முதல்வர்" என்ற வார்த்தைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த ஸ்டிக்கர் சோஷியல் மீடியாவில் படுவைராலாக பரவியது. அ.தி.மு.க. தரப்பு சற்று அதிர்ந்தே போய்விட்டது. அந்த ஸ்டிக்கரில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்று இருந்தாலும், அவரது போட்டோவுக்கு மேல் “நாளைய முதல்வர்” என்ற பட்டம்தான் பரபரப்பை கிளப்பியது. எனினும் இதனை உடனடியாக விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மறுத்தனர்.

தாங்கள் கொடுத்த பொன்னி அரிசி பையில் அப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டவே இல்லை என்று அடித்து சொன்னார்கள். அத்துடன் தங்களது ஒரிஜினில் அரிசி பட ஸ்டிக்கரையும் வெளியிட்டனர். இதையடுத்து தான் இது சம்பந்தமான விசாரணை துவங்கியது. விஜயபாஸ்கரின் தரப்பிலேயே புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

யாரோ “நாளைய முதல்வர்” என்ற வாசகங்களை சேர்த்து திரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி, நடவடிக்கை எடுத்த போலீசார், முத்துக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.. இவர் அ.ம.மு.க.வின் ஐ.டி. விங் செயலாளர் என்று தெரியவந்துள்ளது. இவர் எதற்காக இப்படி செய்தார்? என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக விசாரணை நடத்திய பிறகே உண்மை தன்மை தெரியவரும்.

எனினும், இந்த கைது நடவடிக்கைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ 1,000 பேர் பகிர்ந்த ஒரு பதிவுக்காக முத்துக்குமாரை போலீஸார் கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும், ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட தூண்டுதலுக்கு இணங்கி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலீசாரின் கண்ணியத்தைக் குலைத்துவிடும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்