Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரஅறுவை மில்களில் தேங்கி கிடக்கும் டன் கணக்கான மரங்கள்

மே 12, 2020 12:27

தஞ்சை: ஊரடங்கு காரணமாக டெல்டாவில் உள்ள 740 மர அறுவை மில்களிலும் ஆயிரக்கணக்கான டன் மரங்கள் தேங்கி கிடக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தொழிலாளர்களும் வேலையிழந்து வருமானமின்றி கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த ஊரடங்கினால் மர அறுவை மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மர அறுவை மில்கள் மூடப்பட்டன.

தஞ்சை நகரில் 40 மில்களும், மாவட்டம் முழுவதும் 340 அறுவை மில்களும் உள்ளன. இதேபோல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை நாகை திருவாரூரில் மொத்தம் 740 அறுவை மில்கள் உள்ளன. இந்த அறுவை மில்களுக்கு தேவையான மரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது வழக்கம். குறிப்பாக நைஜீரியா கானா கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து தேக்கு வேங்கை தானி போன்ற மரங்கள் அறுத்து எடுக்கப்பட்டு கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும்.

பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் மர அறுவை மில்களுக்கு கொண்டு செல்லப்படும். மர அறுவை மில்களில் இந்த மரங்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான கட்டைகளாக அறுக்கப்பட்டு வைக்கப்படும். பின்னர் கதவு ஜன்னல் மற்றும் பர்னிச்சர் தயார் செய்பவர்கள் மில்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான மரக்கட்டைகளை வாங்கி வந்து தயார் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு மர அறுவை மில்லிலும் குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சமாக 15 தொழிலாளர்கள் வரையில் வேலை செய்வது வழக்கம். தற்போது 740 மில்களும் மூடப்பட்டு கிடப்பதால் இதில் வேலை பார்த்து வந்த 7400 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக அறுவை மில்கள் திறந்தாலும் வெளி இடங்களில் இருந்து வேலையாட்கள் வருவதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததாலும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு அறுவை மில்லிலும் ஏராளமான மரங்கள் தேங்கி கிடக்கின்றன. சிறிய அறுவை மில்களில் 5 டன்னில் இருந்து பெரிய அறுவை மில்களில் 50 டன் வரையிலும் மரங்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது 740 அறுவை மில்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கட்டைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் மரங்கள் அனைத்தும் வெயிலில் காய்ந்து வருகின்றன.

அறுவை மில்களில் மரங்களை வாங்கி இருப்பு வைப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததாலும் அவைகள் உடனுக்குடன் அறுத்து கட்டைகளை அடுக்கி வைப்பதாலும் வெயிலில் காய்ந்தபடியும் மழையில் நனைந்தபடியும் இருக்கும். ஆனால் கடந்த 45 நாட்களாக வெயிலில் காய்ந்தபடி இருப்பதால் மரங்கள் வெடிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து வருகின்றன.

இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் டன் மரங்களில் 25 சதவீதம் வரை அதாவது 2500 டன் மரங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் அறுத்து வைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளும் அதிக அளவில் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்குவதற்கும் ஆட்கள் வரவில்லை.

இது குறித்து தஞ்சை மாவட்ட மரம் ஓடு சா மில் வியாபாரிகள் சங்க தலைவர் முருகராஜ் கூறுகையில்; நாங்கள் வெளிநாடுகளில் இருந்து தான் மரங்களை இறக்குமதி செய்கிறோம். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 10 ஆயிரம் டன் மரங்கள் தேங்கி கிடப்பதால் அவை சேதம் அடைந்து வருகிறது. மேலும் அறுவை மில்களில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நாட்களிலும் ஊதியம் வழங்கி வருகிறோம். அப்போது தான் அவர்கள் மில்லில் அறுவை தொடங்கிய பின் வேலைக்கு வருவார்கள்.

கடன் வாங்கி மரங்களை இறக்குமதி செய்து வைத்துள்ளோம். ஆனால் தற்போது அதற்கு வட்டி எப்படி கட்டுவது என்று தெரியாமல் திகைத்து வருகிறோம். கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அறுவை நடந்தால் இந்த தொழிலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். இனி அறுவை தொடங்கி, பொருட்களை வாங்க மக்கள் வந்தாலும் எங்களின் நிலைமை சீரடைவதற்கு குறைந்தது 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றார்.

தலைப்புச்செய்திகள்