Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

8 மணிக்கு உரைக்கு பிரதமர் மோடி தயாரானதாக, வைரலாகும் போலி வீடியோ

மே 13, 2020 07:35

புதுடெல்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முன் எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். எனினும், மோடி உரை துவங்கும் முன் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது. வைரல் வீடியோவில் பிரதமர் மோடியுடன் சர்வதேச அழகு கலை நிபுணர்கள் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வைரல் வீடியோ, பிரதமர் மோடி 8 மணி உரைக்கு தயாரான போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது. 40 நொடிகள் ஓடும் வீடியோவில் பிரதமர் மோடியை சுற்றி அழகு கலை நிபணர்கள் நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் பின்னணியில் வடமொழி பாட்டு ஒலிக்கிறது.

ஆய்வு செய்ததில், வைரல் வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மேடம் தசவுட்ஸ் குழுவினரை தனது இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டதாகும். 

மேடம் தசவுட்ஸ் வேக்ஸ் அருங்காட்சியகத்தை சேர்ந்த குழுவினர் தங்களின் அருங்காட்சியகத்தில் அமைத்த மோடியின் மெழுகு  சிலையின் மாதிரிக்கு, அளவுகள் மற்றும் பிற விவரங்களை எடுப்பதற்கு மோடியின் இல்லத்திற்கு மார்ச் 16, 2016 இல் வந்திருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது.

அந்த வகையில் வைரலாகும் வீடியோ நேற்றைய (மே 12) உரைக்கு முன் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே பலமுறை இதே வீடியோ தவறான தகவல்களுடன் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

தலைப்புச்செய்திகள்