Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து இன்ஜி. தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி வேண்டும்: சி.ஐ.டி.யு. சங்கம் வலியுறுத்தல்

மே 13, 2020 10:03

கோவை: “அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளையும் இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்,” என சி.ஐ.டி.யு. இன்ஜினியரிங் சங்கத்தின் நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக் ஜெனரல் இன்ஜினியரிங் அன்டு மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:  

கோவை மாவட்டம் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஒன்றாகும். குறிப்பாக பெரிய, நடுத்தர, சிறு குறு மற்றும் பவுண்டரிகள் என இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் நிரந்திர தொழிலாளர்கள்,  அப்ரண்டீஸ், ட்ரய்னி, கேசுவல், கன்ட்ராக்ட் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் என பல்வேறு கேட்டகிரியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்து மே 17ம் தேதி வரை தொடர்கிறது.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்திற்கு தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்று வரை எந்த நிறுவனங்களும் முழு ஊதியத்தை வழங்கவில்லை. மேலும் ஊதியம் கொடுத்த நிறுவனங்களும் எப்போது வேண்டுமானாலும் திருப்பி பிடித்தம் செய்யும் வகையில் முன் பணமாகத்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்தை வழங்க தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் நகரத்தின் பல பகுதிகளிலும் ஏற்றுமதிக்கான பொருள்கள் உற்பத்திக்கான நிறுவனங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்து அனைத்து பகுதியிலும் உள்ள தொழிற்சாலைகள் இயக்க அனுமதித்து தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை உத்தரவாத வேண்டுகிறோம்.பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் வழங்கப்படும் டீ அல்லது காபி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் இன்ஜினியரிங் சங்க தலைவர் பெருமாள், பொதுச் செயலாளர் துரைசாமி ஆகியோர் மனு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்