Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10 பெண் போலீசார் உட்பட 14 பேருக்கு கொரோனா: கடலூர் காவலர் பயிற்சி பள்ளி மூடல்

மே 13, 2020 10:19

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட 14 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவலர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 394 ஆக உள்ளது. இவர்களுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்று பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், மேற்கொண்டு பாதிப்புகள் அதிகரித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் போலீசாருக்கு அடிப்படை பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. இதில், 134 பெண் போலீசார் பயிற்சி பெற்று வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்ககளுக்கு முன் விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கடலூர் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. மேலும் பயிற்சியில் உள்ள 124 பெண்காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு யார் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று வந்துள்ளது என்பது தெரியாததால் கடலூரில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்