Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயிலாடுதுறை பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

மே 13, 2020 12:27

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை பகுதிகளில் கத்திரி வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி வரை நீடித்தது. பின்னர் தொடர்ந்து 2 மணி வரை சாரல் மழை பெய்தது. 

இதனால் மயிலாடுதுறை நகரில் ரயில் நிலையம், பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியுள்ளது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல் செம்பனார்கோவில், மேலப்பாதி, பரசலூர், கீழையூர், கிடாரங்கொண்டான், திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவாழக்கரை, மேலையூர், கொண்டத்தூர், புதுப்பேட்டை, கஞ்சாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. அப்போது வானம் கருமேகமூட்டத் துடன் காணப்பட்டது. 

இதையடுத்து பலத்த மழை பெய்தது. இந்த மழை 12.15 மணி வரை நீடித்தது. இதனால் மழை நீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மா, பலா, வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, கம்பு, சோளம், எள், வெண்டை, கொத்தவரை, புடலங்காய், பீர்க்கன்காய் மற்றும் கோடை கால சாகுபடியான நெல் பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். மழை பெய்தபோது பலத்த காற்று வீசியதால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

திருக்கடையூர் சுற்றியுள்ள பகுதிகளான டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

இதேபோல் குத்தாலம் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலையூர், பெரம்பூர், மங்கைநல்லூர், கோமல், எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தினால் கடுமையான வெயில் வாட்டி வதக்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் தற்போது பல இடங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்