Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வக்கீல்கள் கவுன், கோட் அணிவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் அட்வைஸ்

மே 14, 2020 05:04

புது டெல்லி: “கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வழக்கறிஞர்கள் கோட், கவுன் ஆகியவற்றை அணிவதை தவிர்க்கலாம்,” என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

நீதித்துறையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கால உடைமுறைகளே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. நமது காலநிலைக்கு ஏற்ப உடைகளை மாற்ற வேண்டும் என்பது நீண்டகால விவாதம். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து வரும் தற்போதும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவும், அங்கிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் செயலாளர் கல்கோன்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமான விசாரணைகள் நடைபெறும் போது வழக்கறிஞர்கள் மேல் அங்கிகள், கவுன்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக வெள்ளை சட்டை, சல்வார் கமீஸ் அல்லது சேலை மற்றும் வெள்ளை நிற கழுத்துப் பட்டை அணியலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்