Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றேன்: பிரபல ஹீரோயின் அதிரடி விளக்கம்

மே 14, 2020 05:06

மும்பை: “வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்?” என்று பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழில், பிரபுதேவா ஹீரோவாக நடித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தொழிலதிபர் ராஜ் குந்தரா, ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு 2012ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வியான் ராஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா தம்பதியினர், கடந்த பிப்ரவரி 15ம் தேதி வாடகைத் தாய் மூலம் இரண்டாவது பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாடகைத் தாய் மூலம் ஏன் குழந்தை பெற்றேன்? என்பது பற்றி நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

என் மகன் வியானுக்குப் பிறகு இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்பினேன். அவன் தனியாக வளர்வதை விரும்பவில்லை. அதனால் குழந்தை பெறத் தயாரானேன். இரு முறை கருத்தரித்தேன். ஆனால், எனக்கிருந்த ஆரோக்கிய குறைபாடு காரணமாகக் கருச்சிதைவு ஏற்பட்டது. இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டதால், மீண்டும் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன்.

அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தேன். அந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருந்தன. இதற்காக 4 வருடங்கள் காத்திருந்தேன். அதுவும் சரியாக அமையவில்லை. அதனால் அந்த முடிவை கைவிட்டேன். இதனால் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன். எனது கணவரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார். இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். இரண்டு குழந்தைகளுடன் அவர் இருக்கும் வீடியோவையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்