Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது: பா.ஜ., குற்றச்சாட்டு

மே 15, 2020 05:20

புதுடெல்லி: வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனுக்கு தப்பி சென்ற, வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற, காங்., முயற்சிப்பதாக பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவின், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார், வைர வியாபாரி நிரவ் மோடி(49). இவர், கடந்த ஆண்டு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சட்டத்துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு வீடியோ கான்பரன்சில் பேட்டி அளித்த போது கூறியதாவது: லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடிக்கு ஆதரவாக, இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அபய் திப்சே வீடியோ கான்பரன்சிங் வழியாக சாட்சியம் அளித்தார். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், நிரவ் மீது சிபிஐ சுமத்திய குற்றச்சாட்டுகள் செல்லுபடியாகாது என அவர் சாட்சி அளித்தார்.

திப்சே, நீதித்துறையில் பிரபலமானவர் இல்லை. ஓய்வுக்குப்பின் அவர், காங்., கட்சியின் ராகுல், அசோக் கெலாட், அசோக் சவான் உள்ளிட்டோரை அடிக்கடி சந்தித்துள்ளார். காங்., கட்சியின் உத்தரவுப்படி நிரவை காப்பாற்ற அவர் முயற்சிப்பதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. நிரவ் மோடிக்கு ஆதரவாக திப்சே சாட்சி அளித்ததும் சந்தேகம் உறுதியாகி உள்ளது.

நிரவ் மோடி தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, லண்டனுக்கு தப்பி சென்றாலும், அவர் மோசடி செய்தது காங்., கூட்டணி ஆட்சியின் போது தான். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நிரவ் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி, சட்டத்தின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்