Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம்பெயர் தொழிலாளர்களை தலைகுனியவிடமாட்டோம்: ராகுல் காந்தி உறுதி

மே 15, 2020 08:08

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை மண்டியிடுவதற்கு ஒருபோதும் விடமாட்டோம், அவர்களின் அழுகுரல் மத்திய அரசின் செவிகளில் விழுவதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். அதன்பின் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இதுவரை 10 லட்சம் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக பொருளாதாரத்திட்டங்கள், நிதித்தொகுப்பை மத்திய அரசு அறிவிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்களை அறிவித்தும் அது போதுமானதாக இல்லை, வார்த்தை ஜாலம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ அங்கு கரிய ஆழ்ந்த இருள் சூழ்ந்திருக்கிறது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடினமான காலங்கள்தான். ஆனாலும், வலிமையோடு இருந்து நாம் அனைவரும் அவர்களின் பாதுகாப்பிற்காக துணை நிற்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் அழுகுரல் மத்திய அரசின் செவிகளில் சென்றடைவதை நாம் உறுதி செய்வோம், புலம்பெயர் தொழிலாளர்கள் உதவிகளைப் ெபற தகுதியானவர்கள். அவர்கள் நாட்டின் சாதாரண மக்கள் அல்ல, நாட்டின் சுயமரியாதைக்காக கொடி ஏந்தியவர்கள். நாங்கள் அவர்களை ஒருபோதும் மண்டியிடவிடமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே ெசல்லும் வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி தனது ட்விட்டருடன் இணைத்துப் பகிர்ந்துள்ளார்

பிரியங்கா காந்தி வத்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ தேசத்தி்ன் சாலைகளில் குழப்பம் நீடிக்கிறது. மெட்ரோ நகரங்களில் பணிபுரிந்து வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டிணியுடன், தாகத்துடன் குழந்தைகளுடன், குடும்பத்துடன் சாலைகளில் நடந்து வருகிறார்கள். அவர்களை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டார்கள். ேம மாதத்தின் கொடூர வெயிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கலள் சாலையில் நடந்து வருகிறார்கள். நாள்தோறும் நடக்கும் சாலை விபத்துகளில் நடந்து செல்லும் ஏழைகள் உயிரிழக்கிறார்கள்

நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஏன் அரசு பேருந்துகளை இயக்க மறுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 20 ஆயிரம் பேருந்துகள் பயனின்றி இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வியர்வையால்தான் மெட்ரோ நகரங்கள் வளர்ந்தன, நாடு முன்னோக்கி நகர்ந்தது. கடவுளின் பொருட்டு அவர்களை சாலைகளில் வறுமையில் விட்டுவிடாதீர்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸாலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இதுதான் நாம் அவர்களுக்கு சேவையாற்ற தகுதியான நேரம்.

ஏற்கெனவே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் போலீஸார், தயவு செய்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பலப்பிரயோகம் செய்து விடாதீர்கள். ஏற்கனவே அவர்கள் நொந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மரியாதையை கருணையோடு பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்