Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ரயில் பயணிகள்: திருப்பி அனுப்பிய கர்நாடக அதிகாரிகள்

மே 15, 2020 08:15

பெங்களூரு: புதுடெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு 553 பயணிகளுடன் சிறப்பு ரயில் வந்ததையடுத்து பிரச்சனைகள் ஆரம்பமாகின. வருபவர்கள் கட்டாயத் தனிமையில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்ற மாநில அரசு உத்தரவுகளை பயணிகள் எதிர்த்தனர்.

இதனையடுத்து சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமல் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் இவர்கள் 3-4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர்.

ஆனால் மாநில அரசு ஒரு ரயில் பெட்டிக்கு ஒரு ஸ்க்ரீனிங் சாவடி என்றமுறையில் 500 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் , போலீஸார் என்று அனைவரும் இவர்களுக்காகத்தான் பணியில் இருந்தனர். ஆனால் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வது பற்றி தங்களுக்கு ஏன் முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அவர்கள் போராட்டம் செய்தனர்.

ஸ்க்ரீனிங் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்கெல்லாம் 140 பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். தங்களை பரிசோதித்துக் கொள்ள மாட்டோம் என்று அடம்பிடித்தனர். விடுதிகள் மற்றும் அரசு தனிமை மையங்களுக்குச் செல்ல மாட்டோம் என்றும் பிடிவாதம் பிடித்தனர்.

பலரும் தங்களை தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர், ஆனால் அதற்கு விதிமுறைகளில் இடமில்லை என்று அதிகாரிகள் மறுத்தனர்.

பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு 19 பேர் நீங்கலாக மற்றவர்கள் பணிந்தனர். ஆனால் பணியாத 19 பேர் மீண்டும் பெங்களூரு டெல்லி பயணிகள் ரயிலில் ஏற்றிவிடப்பட்டனர், இவர்கள் செகந்தராபாத்தில் இறங்கிவிடுவார்கள்.

507 பயணிகள் நிறுவனரீதியான தனிமைப்படுத்தலுக்கு ஒப்புக் கொண்டனர், இதில் 203 பேர் அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச தனிமை மையங்களுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். மீதி பேர் விடுதிகளுக்குச் சென்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பயணிகள் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதிச் சீட்டு வைத்திருந்தனர், இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

சுகாதார நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்