Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொந்த ஊர் திரும்பிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள்: வடமாநிலங்களில் படுவேகமாக உயரும் கொரோனா பாதிப்பு

மே 15, 2020 12:52

புதுடெல்லி: பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியிருப்பதால் வட இந்திய மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.

கொரோனா பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. 4-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.  4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகள் இருக்கலாம் என தெரிகிறது. பொது போக்குவரத்துகளில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் பிற மாநிலங்களில் இருந்து இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். மத்திய அரசு மே 1ம் தேதி முதல் இதற்கான சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரயில்களில் 75 சதவீதம் வட இந்திய மாநிலங்களுக்குத்தான் இயக்கப்பட்டன. இவர்கள் மட்டுமின்றி டிரக்குகள், சைக்கிள்கள் மற்றும் நடைபயணமாகவே நடந்து ஊர் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்.

இந்த தொழிலாளர்கள் உரிய சோதனைகளுக்குப் பின்னர்தான் மாநிலங்களுக்குள் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஒரு வார வட இந்திய மாநிலங்களின் நிலவரத்தை பார்த்தால் கொரோனாவின் தாக்கம் இனிவரும் நாட்களில் இந்த மாநிலங்களில் தான் மிக அதிகமாக இருக்கும் என்கிற சூழ்நிலை உருவாகலாம். பீகாரில் 1 வார காலத்தில் 400 புதிய கொரோனா நோயாளிகள் உருவாகி உள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் அதிகம். தற்போது இந்த எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் 40 சதவீதம் கொரோனா மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கொரோனா உயிரிழப்புகள் மிக அதிகமாகி வருகின்றன. ஆகையால், கொரோனா பாதிப்பும் மரணங்களும் வட இந்திய மாநிலங்களில் மிக அதிகமாக கூடும் என்றே தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்