Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தழுதாழை மர சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு: அரசு மர சிற்பகலைக்கூடம் அமைக்க கலைஞர்கள் வலியுறுத்தல்

மே 16, 2020 06:30

அரியலூர்: அரும்பாவூர் தழுதாழை மர சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த தொழிலை மேம்படுத்த பெரம்பலூரில் அரசு சார்பில் பெரிய அளவிலான மரசிற்ப கலைக்கூடம் அமைக்க சிற்ப கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தனித்துவமான பண்புகள் தரத்துடன் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருளை சம்பந்தப்பட்ட இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் தயாரித்து அதே பெயரில் சந்தைப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. 

மேலும் அந்த பொருட்களுக்கு உலகளவிலான சந்தையை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும். காஞ்சீபுரம் பட்டுச்சேலை மதுரை மல்லிகை பத்தமடை பாய் என்று பல்வேறு பொருட்களுக்கும் சமீபத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழை கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதி மரசிற்ப கலைஞர்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரும்பாவூர் தழுதாழை கிராமத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல குடும்பங்கள் மரசிற்ப வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆரம்ப காலத்தில் இவர்கள் வீடுகளின் கதவு ஜன்னல்கள் மரக்கட்டில் போன்ற மர வேலைகளில் ஈடுபட்டுவந்தனர். பின்பு நாளடைவில் கோவில் தேர் கோவில் கொடி மரம் சுவாமி புறப்பாடு வாகனம் சாமி சிலைகள் ஏசுசுநாதர் சிலைகள் நடன சிலைகள் தலைவர்களின் சிலைகள் வீட்டிற்கு தேவையான அலங்கார சிற்பங்கள் என மரங்களில் செய்யப்படும் அனைத்து வகையான சிற்ப வேலைகளையும் அழகிய வேலைபாடுகளுடன் இன்றளவும் செய்து அசத்தி வருகின்றனர்.

தற்போது சுமார் 300 குடும்பங்கள் இந்த மர சிற்ப வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இலுப்பை தேக்கு போன்ற மரங்களை கொண்டுவந்து மர சிற்ப சிலைகள் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், அவிநாசி வட பழனி ஆவுடையார்கோவில், விராலிமலை, திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் என தமிழகத்தின் பல புகழ்பெற்ற கோவில்களின் தேர்களை செய்தவர்கள் இந்த மரசிற்பிகளே. அரும்பாவூர் தழுதாழையில் தயாரிக்கப்படும் மரசிற்பங்கள்இ கலைப்பொருட்கள் கண்காட்சிகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இவ்வாறு கலை நயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகளை வடிவமைத்து கொடுத்ததால் அரும்பாவூர் தழுதாழை மரசிற்பம் உள்ளூர் வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டதால் உலக புகழ் பெற்று இன்றளவும் விளங்கி வருகிறது. அதனை தொடர்ந்து அந்தப்பகுதி மரசிற்ப கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு பூம்புகார் நிறுவனம் மூலம் புவிசார் குறியீடு பதிவகத்தில் அரும்பாவூர் தழுதாழை மரசிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். 

இதையடுத்து 2020 ஜனவரி 10-ந் தேதி அரசிதழில் இது குறித்து ஆட்சேபனை கேட்டு வெளியிடப்பட்டது. 4 மாதம் இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு ஏதும் ஆட்சேபனை வராததால் இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் இயங்கி வரும் புவிசார் குறியீட்டின் பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் அரும்பாவூர் தழுதாழை மரசிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்டதுடன் ஓரிரு தினங்களில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். 

இது தமிழர்களின் பாரம்பரியத்துக்கு கிடைத்த மற்றுமொரு பெருமை என்றே கூறலாம். இதுகுறித்து தமிழ்நாடு திருத்தேர் சிற்ப கலைஞர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் தழுதாழை முருகேசன் கூறுகையில்; அரும்பாவூர் தழுதாழை மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்ததற்கு மர சிற்ப கலைஞர்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த அங்கீகாரம் எங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ள உதவும். 

தமிழக அரசு தழுதாழை மர சிற்ப கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பெரம்பலூரில் மிகப்பெரிய அளவிலான சிற்பக்கலை கூடம் ஒன்று அமைத்து அதில் மர சிற்பக் கலைஞர்கள் வேலைப்பாடுகளுடன் கூடிட மரச்சிற்பங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விற்க
ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றார்.

அரும்பாவூர் மரசிற்ப கூட்டுறவு சங்க தலைவர் கஜேந்திரன் கூறுகையில்; முன்பெல்லாம் படிப்பறிவு இல்லாதவர்கள் இந்த மர சிற்ப வேலைகளில் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது பட்டப்படிப்புகளை படித்த இளைஞர்கள் இந்த மரசிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசு மர சிற்ப கலைஞர்களுக்கு வங்கி கடனுதவி வழங்கி இந்த தொழிலை மேன்மேலும் ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்