Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு உத்தரவு விதிமீறல்: பாஜ., தலைவர் முருகன், பிரேமலதா மீது வழக்கு

மே 16, 2020 07:15

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை மீறியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மற்றும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயஶ்ரீ என்ற பத்தாம் வகுப்பு மாணவி தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். குடும்ப முன்பகை காரணமாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் முருகன், கலிய பெருமாள் இருவரும் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது விழுப்புரம் ஜெயஶ்ரீ படுகொலை சம்பவம். ஜெயஶ்ரீ குடும்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியதுடன் ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், சிறுமதுரை கிராமத்துக்கு சென்றார். அங்கு ஜெயஶ்ரீ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தமிழக பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியையும் முருகன் வழங்கினார். தமது கட்சியினருடன் பெரும் கூட்டமாக சிறுமதுரை கிராமத்துக்கு முருகன் சென்றிருந்தார்.

இதேபோல் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் சிறுமதுரை கிராமத்துக்கு சென்று ஜெயஶ்ரீ குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அந்த குடும்பத்தினருக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.1 லட்சம் உதவித் தொகையை பிரேமலதா வழங்கினார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஜெயஶ்ரீயை எரித்து கொன்றவர்களை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல வேண்டும்,” என்றார்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாட்டுகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முருகன் மீது திருவெண்ணய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை மீறி கூட்டமாக இருவரும் சென்றதால் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இவருமே அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள். ஆனாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்