Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்: மகாராஷ்டிரா- ம.பி. எல்லையில் கல்வீச்சு

மே 16, 2020 07:23

போபால்: மகாராஷ்டிராவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் மத்திய பிரதேச எல்லையில் திடீரென போராட்டம் நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மே 7ம் தேதியுடன்  முடிவடையும் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மத்திய அரசு இயக்கும் மாநில அரசுகளின் ஏற்பாட்டிலான சிறப்பு ரயில்களில் கணிசமானோர் சொந்த ஊர் திரும்புகின்றனர். கடந்த மே 1ம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களுக்குத்தான் அதிகளவில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பெரும்பாலானோர் டிரக்குகள், நடைபயணமாக சொந்த மாநிலம் திரும்புகின்றனர். இப்படி செல்லும் வழியில் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். அதேநேரத்தில் தங்களது மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்காதா? என பிற மாநிலங்களில் தவித்தும் வருகின்றனர். மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரும்புகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் நடைபயணமாகவே மகாராஷ்டிராவை விட்டு புறப்பட்டு மத்திய பிரதேசத்தை சென்றடைகின்றனர். அனைவரும் மத்திய பிரதேச எல்லையான பர்வானியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு தாமதம் செய்கிறது என புகார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருபகுதியில் ஆவேசமடைந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது கல்வீசித் தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதால்தான் இந்த பிரச்சனை உருவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை உருவானது.
 

தலைப்புச்செய்திகள்