Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேபிட் டெஸ்ட் கருவிக்காக, சீனாவிடம் கொடுத்த ரூ.1.50 கோடியை திரும்ப பெற்றது தமிழக அரசு

மே 16, 2020 07:49

சென்னை: சீன நிறுவனத்திற்கு 'ரேபிட் டெஸ்ட்' கருவிக்காக கொடுத்த 1.50 கோடி ரூபாயை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை உடனடியாக கண்டறிய உதவும் 'ரேபிட் டெஸ்ட்' கருவிகள் வாங்க ஏப்ரலில் தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி சுகாதார துறை சார்பில் 50 ஆயிரம் கருவிகள்; மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் கருவிகள் சீன நாட்டு நிறுவனத்திடம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான தொகை செலுத்தப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டன. அதேபோல மத்திய அரசிடம் இருந்து 12 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டன.

இந்த கருவி வாயிலாக சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கருவியில் மாறுபட்ட முடிவுகள் வருவதாக புகார் எழுந்தது. இதற்கிடையே ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்ததால் ஒரே நாளில் பரிசோதனை நிறுத்தப்பட்டது. பின் தமிழக அரசு வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து சீன நிறுவனத்திற்கு வழங்கிய 1.50 கோடி ரூபாயை அரசு திரும்ப பெற்றுள்ளது.

இது குறித்து மருத்துவ பணிகள் சேவை கழக மேலாண் இயக்குனர் உமாநாத் கூறியதாவது: தமிழகத்தில் 5,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப் பட்டன. ஆனால் அதற்கான பயன்பாடு சரியில்லாததால் மொத்த தொகையும் திரும்ப பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

தலைப்புச்செய்திகள்