Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி. முதல்வர் யோகியை புகழும் வெளி மாநில தொழிலாளர்கள்

மே 16, 2020 07:54

பாட்னா: பல்வேறு மாநிலங்களில் இருந்து உ.பி., வழியாக பீஹாருக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள், தங்களை உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றாக கவனித்து கொண்டதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் நடந்தும், வாகனங்கள் மற்றும் பஸ் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். நடந்து வருபவர்களில் சிலர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அல்லது சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதேநேரத்தில், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உ.பி., வழியாக பீஹாருக்கு ஏராளமான தொழிலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு, உ.பி., மாநில போலீசார் மற்றும் அதிகாரிகள் உணவு, தண்ணீர் வழங்கியதுடன் போக்குவரத்து வசதியையும் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பீஹாரின் சாப்ரா மாவட்டத்திற்கு திரும்பும் வழியில் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: பீஹாரில் நுழைந்த உடன் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை விட, உ.பி., சிறப்பாக கவனித்து கொண்டது. உ.பி.,யில், போலீசார் எங்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்தனர். பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு தேவைப்படும் நிலையிலும், அவர்களே உணவு, பிஸ்கட் மற்றும் குடிநீர் கொடுத்தனர். ஆனால், சொந்த ஊரில், பஸ் வசதி கிடைக்கவில்லை. எங்களிடம் பேசக்கூட போலீசார் விரும்புவதில்லை. நாங்கள் கடந்து வந்த பாதையில் எங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், உ.பி.,யில் சரியாக உணவு வழங்கினர். ஆனால், சொந்த மாநிலத்தில் உணவு கிடைக்குமா என தெரியவில்லை. வெளிமாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். இதனால் 19 லட்சம் பேர் பயனடைவார்கள் என பீஹார் அரசு தெரிவித்தது. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. ரயில் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிப்பதில் சிக்கல் உள்ளதால், ஆயிரகணக்கானோர், சொந்தமாகவே வாகன வசதி ஏற்படுத்தி சொந்த ஊருக்கு திரும்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பீஹார் மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறுகையில், டெல்லியில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு பீஹார் எல்லை வரை பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்ததன் மூலம் அவர்கள் மத்தியில் யோகியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ராஜஸ்தானின் கோடாவில் உ.பி.,யை சேர்ந்தவர்களை மீட்க பஸ்களை அனுப்பிய யோகி, அங்கிருந்த பீஹார் மாநிலத்தவரையும் அழைத்து வந்து மாநில எல்லையில் இறக்கிவிட்டார். இதனால், நிதிஷ்குமார் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்தனர்.

அரசு தகவல்படி, கடந்த 10 நாட்களில், வெளிமாநிலங்களில் பணிபுரிந்த 3 லட்சம் பேர் பீஹார் திரும்பியுள்ளனர். தற்போது அவர்கள் தனிமைபடுத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்