Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்

மே 16, 2020 11:44

சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு நடந்து செல்ல வேண்டாம். தங்கியிருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுவரை 55,473 வெளிமாநில தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரயில்களில் பீஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மே.வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமும் சுமார் 10 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து, வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயண செலவுகளையும் தமிழக அரசு ஏற்று கொள்வதால், வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். அதுவரை வெளிமாநில தொழிலாளர்கள், தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை மீடியாக்களில் காணும் போது, எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கியுள்ளன? சொந்த ஊர் திரும்பும் வழியில் எத்தனை தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்? அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உ.பி.,யில் நடந்த சாலை விபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் இ.பி.எஸ்., இரங்கல் தெரிவித்துள்ளா்ர. விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: செவித்திறன்குறைபாடுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவாக உதவு மறைவற்ற மாஸ்க் விநியோகம் செய்யப்படுகிறது. காது கேளாத நபர்கள்,பிறருடன் தகவலை பரிமாற்றம் செய்ய ஏதுவாக மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை செவிதிறன் பாதிக்கப்பட்ட, வாய் பேச இயலாத 1,300 பேருக்கு 81 ஆயிரம் உதடு மறைவற்ற மாஸ்க் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 701 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திரு.வி.க., நகர் மண்டலத்தில் 119 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சென்னையில் 5,946 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 783 பேர் குணமடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்