Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்காக 1000 பஸ்களை எங்கள் செலவில் ஏற்பாடு செய்ய தயார்: பிரியங்கா

மே 17, 2020 06:50

புதுடெல்லி: உ.பி.,யில் சிக்கி தவிக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல, 1000 சிறப்பு பஸ்களை காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு அனுமதி அளிக்கும்படி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து யோகிக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா கூறியதாவது: உ.பி.,யில் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 1000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளோம். காசியாபாத்தில் உள்ள காசிப்பூர் எல்லையிலிருந்து 500 பஸ்களையும், நொய்டா எல்லையிலிருந்து 500 பஸ்களையும் இயக்க விரும்புகிறோம். இதற்கான முழு செலவையும் காங்., கட்சி ஏற்கும். அவர்கள் வீடு சென்று சேரும் வரை இருக்கும் அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 1000 பஸ்களையும் இயக்க அனுமதி தாருங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று அதிகாலை உ.பி.,யில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாயினர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரியங்கா, 'உத்தர பிரதேசத்தில், 24 தொழிலாளர்கள் பலியானது, வேதனை அளிக்கிறது. தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு வாகன வசதியை ஏற்படுத்தி தருவதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டுவது, பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அறிக்கை வெளியிடுவது மட்டும் தான் அரசாங்கத்தின் வேலையா?' என தெரிவித்திருந்தார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்ததை தொடர்ந்து, நடந்தோ, பைக்கிலோ பாதுகாப்பற்ற முறையில், தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கும் தொழிலாளிகளை தடுத்து நிறுத்த அனைத்து போலீஸ் ஸ்டேசனிலும் குழுக்களை ஏற்படுத்த, நேற்று முன்தினம்(வெள்ளி) உத்தரவிட்டிருந்தார். மேலும், உ.பி.,க்கு வரும் தொழிலாளர்கள், எல்லைக்குள் நுழைந்தவுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் கூறியிருந்தார்.

தலைப்புச்செய்திகள்