Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொருளாதார புயலை எப்படி எதிர்கொள்வது என பிரதமருக்கு தெரியும்: ராகுலுக்கு பாஜ., பதிலடி

மே 17, 2020 08:35

புதுடெல்லி: பொருளாதாரத்தில் மிகப்பெரிய புயல் உருவாகி வருவதாக காங்., முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்துக்கு, அந்த புயலை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தெரியும் என பாஜ., பதிலடி கொடுத்துள்ளது.

காங்., முன்னாள் தலைவர் ராகுல், காணொலி மூலம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு வட்டிக்கு கடன் கொடுப்பவர் போல் நடந்து கொள்ளாமல் ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக கைகளில் பணத்தை வழங்கிட வேண்டும். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் நேரடியாக பணத்தை வழங்காதவரை பொருளாதார சக்கரம் சுழலாது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய புயல் உருவாகி வருகிறது. அந்தப் புயல் தீவிரமடையும் போது, பெரும் சேதங்களை ஏற்படுத்தும்; ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன், என பேட்டியளித்தார்.

இதற்கு பாஜ., செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் அருகே நின்று கொண்டு எளிதாக புயலைக் கணித்து விடலாம். ஆனால், அந்தப் புயலைச் சந்திப்பது என்பது வித்தியாசமானது. பிரதமர் மோடிக்கு அந்த புயலைச் சந்திக்கும் தகுதி இருக்கிறது. அதை எப்படி கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதும் தெரியும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியால் கடந்த 2014ம் ஆண்டில் சுனாமி போன்று வந்த ஊழல்கள், வலுவிழந்த கொள்கைகள் ஆகியவற்றை எளிதாக எதிர்கொண்டு நாட்டை சீர்படுத்தி வழிநடத்தி வருபவர் பிரதமர் மோடி. ஆகவே ராகுல் சற்று ஓய்வெடுக்கலாம்.

காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து செய்ய முடியாத நல்ல விஷயங்களை பாஜ., ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட காலத்தில் கோடிக்கணக்கான ஏழைகள், விவசாயிகளுக்கு பல்வேறு வழிகள் மூலம் நேரடியாக பணத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது. இந்த உதவி மட்டுமின்றி பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு, திட்டங்களை அறிவித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்