Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மே 18, 2020 10:13

சென்னை: “குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்,” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டுர் அணை கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் இதுவரை மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது மேட்டூர் அணையில் அதன் முழு கொள்ளளவான 120 அடியில், 100 அடி நீர் இருக்கிறது. வழக்கமாக, 90 அடி நீர் இருப்பு இருந்தாலே, ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும்.

இந்த சூழலில் அணை திறப்பு குறித்து அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ். மணியன் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திய முதல்வர் மேட்டூர் அணை திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்படும் என்றும், இதன் மூலம் 3.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறக் கூடும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள், இடுபொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்தாண்டு 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், காவிரி பாசன கால்வாய்களை விரைந்து தூர்வார உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் டெல்டா பகுதிகளில் 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்