Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் நாளை முதல் பஸ், ஆட்டோ ஓடும்!

மே 18, 2020 10:16

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் சிவப்பு மண்டலம் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகள் தவிர்த்த பிற அனைத்து பகுதிகளிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெங்களூருவில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர் எடியூரப்பா. மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

சிவப்பு மண்டலம் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகள் தவிர்த்து, பிற அனைத்து பகுதிகளிலும், ஏசி வசதியில்லாத, அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்கி கொள்வதற்கு அனுமதி வழங்குறோம். நாளை  முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும். நஷ்டமானாலும் பரவாயில்லை. ஒரு பேருந்தில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை பஸ்கள் இயங்காது. முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அனைவருக்கும் முக கவசம் என்பது கட்டாயமாகும்.

பூங்காக்களில் காலை மற்றும் மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படும். இதுபோன்ற விதிமுறைகளைப் பின்பற்றா விட்டால், காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள். பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள். நேரடியாக வீடுகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அனாவசியமாக, வேறு மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரக்கூடாது.

ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் மற்றும் அதிகபட்சம் பயணிகள் இருவர் பயணிக்க அனுமதி உண்டு. நாளை  முதல் இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் முக கவசம் கட்டாயமாகும். மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை தவிர்த்து விட்டு, அனைத்து வகை கடைகளையும் துவங்கலாம். தெருவோர வியாபாரிகளும், நகைக் கடைகளும் கூட விற்பனையை துவங்கலாம்.

ரயில்கள் கர்நாடக மாநிலத்திற்கு உள்ளே மட்டும் இயக்க அனுமதி வழங்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து, வரக்கூடிய ரயில்களுக்கு அனுமதி கிடையாது. கடைகளைத் திறக்கலாம் என்றாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அன்றைய தினம், எந்த ஒரு கடையும் திறக்கப்பட கூடாது. போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது. மக்கள் வெளியே சுற்றக்கூடாது.

இவ்வாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்