Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிதி அமைச்சர் அறிவிப்பு ஏமாற்றம்?: அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

மே 18, 2020 10:24

திருச்சி : மத்திய நிதிஅமைச்சரின் கொரோனா நிதி 20 லட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரை நிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடனிலே பிறந்து, கடனோடு வாழ்ந்து, சாகும்வரை கடனை வைத்திருந்து, சாவிற்கு பிறகு தனது வாரிசுகளான மகன், மகள்களுக்கு கடன்களை சொத்தாக விட்டு செல்லும் நிலை மாறி, பாரத பிரதமர் மோடி அளித்த கொரோனா நிதி 20 லட்சம் கோடியிலிருந்து காப்பாற்றுவார் என்று எண்ணிய நிலையில் வெற்று அறிவிப்பாக உள்ளது. பாரத பிரதமர் மோடி கொரோனாவால் பாதித்த மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணநிதி ஒதுக்கியவுடனே இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நிதியமைச்சரின் அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. மக்கள் தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தை சார்ந்தவர்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி  நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதற்காகவும், வங்கி மேலாளர்களை கண்டு விவசாயிகள் ஓடி ஒழியும் அடிமைகளாக்குவதற்காகவும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுப்பது எதுவும் இல்லாமலும், கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது, விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும். கடனோடு வாழ வேண்டும். லாபகரமான விலை இல்லாததாலும், இயற்கை சீற்றங்களாலும், விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்மந்தமாகவோ, நிதியமைச்சர் அறிக்கையில் எதுவும் இல்லை.

விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வரை கடன் தள்ளுபடியும், ஏக்கருக்கு ரூ.20,000 நஷ்டஈடும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பார்க்காமல் மகன், மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் ( அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுப்பதுபோல்) மாதம் ரூ.5,000/- ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸூம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச்சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்