Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் விவகாரத்தில் பா.ஜ., - காங்கிரஸ் மோதல்

மே 19, 2020 06:44

புதுடெல்லி: கொரோனா வைரஸ் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக, கொரோனாவை வைத்து, காங்., தலைவர்கள் அரசியல் செய்வதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளிக்கவில்லை என, காங்., கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு, பா.ஜ., தலைவர்கள், சுடச் சுட பதிலடி கொடுத்து வருகின்றனர். 'நாடே பெரும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் கூட, காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்கின்றனர்' என, குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காங்., தலைவர் ராகுல், நேற்று கூறியதாவது: 'கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசின் தோல்விச் சின்னம்' என, 2014ல், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஐ.மு., கூட்டணி அரசு உருவாக்கிய இந்த வேலை வாய்ப்பு திட்டத்துக்குத் தான், பிரதமர், 40 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்; இதற்காக பிரதமருக்கு நன்றி. இவ்வாறு, அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறியதாவது: கனடா போன்ற நாடுகளில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பார்லிமென்ட் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனால், நம் நாட்டில், கொரோனா பிரச்னையை காரணம் காட்டி, பார்லிமென்ட் குழுக்களின் கூட்டங்களை கூட, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்த மறுக்கின்றனர்; இது, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஜிதேந்திர சிங் கூறியதாவது: காங்., தலைவர்கள், கொரோனா விவகாரத்தை கையில் எடுத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், எதுவுமே செய்யாதது போல், காங்கிரஸ் கட்சியினர் குறை கூறுகின்றனர். கொரோனா பிரச்னையில் கூட, காங்., கட்சியினர் அரசியல் செய்வது, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா கூறியதாவது: பா.ஜ., வை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத எதிர்க்கட்சியினர், முதுகில் குத்த முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது, ஜனநாயக நாடு. கொரோனா விஷயத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில், அரசு நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் விமர்சிக்கும், பா.ஜ., வினர் மீது, பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இதுபோன்ற அடக்குமுறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்