Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீஹார் தேர்தலுக்கு அச்சாரம் போடும் பிரதமர் மோடி

மே 19, 2020 06:51

புதுடெல்லி : பிரதமர் மோடி, இம்மாத இறுதியில், ரேடியோ வாயிலாக பேசும், 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி, பீஹார் சட்டசபை தேர்தலுக்கு அச்சாரம் போடும் விதமாக இருக்கும் என, தெரிய வந்துள்ளது.

தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமையில், நாட்டு மக்கள் மத்தியில், ரேடியோ வாயிலாக, உரை நிகழ்த்தி வருகிறார். இதில், முக்கிய விஷயங்கள் இடம் பெறும். அதன்படி, வரும், 31ல், பிரதமர் நிகழ்த்த உள்ள உரை, சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது. காரணம், இந்த உரை, பீஹார் சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தியதாக, இருக்கும். கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறம் இருந்தாலும், பீஹார் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை, பா.ஜ., முழுவீச்சில் துவங்கி விட்டது.

மாநிலம் முழுதும், பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகள் ஒவ்வொன்றிலும், ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, 'சப்த ரிஷிகள்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொத்தம், 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனும், பா.ஜ., மூத்த தலைவர்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றனர்.இந்த சப்த ரிஷிகள் அனைவரும், வரும், 31ல் பிரதமரின், மன் கி பாத் உரையை கண்டிப்பாக கேட்க வேண்டுமென கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காகவே இம்முறை, பிரதமரின் உரைக்கு, 'மன் கி பாத், சப்த ரிஷி கே சாத்' அதாவது, 'சப்த ரிஷிகளுடன், பிரதமர் மனம்விட்டு பேசுகிறார்' என, பெயரிடப்பட்டுள்ளது. 'பிரதமரின் உரையில், தற்சார்பு, புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை, பொருளாதார மீட்பு உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெறவுள்ளன.

'எனவே, பீஹார் மாநில பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும், இந்த உரையை கண்டிப்பாக கேட்க வேண்டும்; அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பிரதமரின் இம்மாத, மன் கி பாத் உரை, பா.ஜ.,வினர் மத்தியில், கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்