Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜயகாந்துடன் ராமதாஸ், அன்புமணி சந்திப்பு

மார்ச் 14, 2019 09:36

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று காலை 11.15 மணிக்கு வந்தனர். 

அவர்களுடன் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வந்திருந்தார்கள். 

காரை விட்டு இறங்கி நின்ற சிறிது நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் வந்தனர். 

அவர்களை விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் வாசலுக்கு வந்து அழைத்து சென்றார். விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா தொகுதி பங்கீட்டு குழுவினர் டாக்டர் இளங்கோவன், மோகன் ராஜ், பார்த்தசாரதி ஆகியோரும் இந்த சந்திப்பின் போது இருந்தனர். 

டாக்டர் ராமதாஸ், விஜயகாந்துக்கு சால்வை அணிவித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் டாக்டர் ராமதாஸ் வெளியே வந்தார். 

உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகு அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். பா.ம.க.- தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதிகளை பிரிப்பதில் இழுபறி ஏற்படுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் பிரேமலதா சுதீசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றனர். 

தலைப்புச்செய்திகள்