Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்.எல்.சி. கொதிகலன் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

மே 19, 2020 09:08

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், மேலும் ஒரு ஒப்பந்த தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்திப் பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7ம் தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகிய 8 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் நிரந்தர ஊழியர்கள் சர்புதீன், பாவாடை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், பாலமுருகன் ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒப்பந்த தொழிலாளி அன்புராஜன் (47) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார். இதனால் என்.எல்.சி. தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்