Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்: செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது வழக்கு

மே 19, 2020 09:11

கரூர், மே.20: கரூர் மாவட்ட கலெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி, தி.மு.க.வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் உதவி கேட்டு பெறப்பட்ட மனுக்களை, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து வழங்கினார். 

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான தன்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோரை அழைப்பதில்லை. ஆனால், கிரு‌‌ஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பது குறித்து கலெக்டரிடம் கேட்டபோது, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்றும், அவர்கள் தகவல் கிடைத்து வருகின்றனர். உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், என்று கூறுகிறார். கலெக்டர் பக்குவம் இல்லாமல் பேசுகிறார். இனி கூட்டங்களுக்கு என்னை அழைக்காவிட்டால், கலெக்டர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் கடந்த 16-ந்தேதி புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில், கடந்த 12-ந்தேதி அலுவலகத்திற்கு 25 பேருடன் வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, கொரோனா ஆய்வுக்கூட்டங்களுக்கு எம்.எல்.ஏ. என்ற முறையில் தன்னை அழைப்பதில்லை என்று கேட்டார். பின்னர், நிருபர்களை சந்தித்த செந்தில்பாலாஜி தன்னை அச்சுறுத்தும் வகையில் பேட்டியளித்ததாகவும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தாந்தோணிமலை போலீசார், 5 பேருக்கு மேல் கூட்டமாக வந்தது, ஊரடங்கை மீறியது, தகாத வார்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என 5 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்